5 ஊராட்சி மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது


5 ஊராட்சி மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது
x

மாதனூர் ஒன்றியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 5 ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

வேலூர்

சிகிச்சையளிக்க மறுப்பு

மாதனூர் ஒன்றியத்தில் இருந்த அகரம் சேரி, சின்னசேரி, பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம் ஆகிய 5 ஊராட்சிகளை குடியாத்தம் ஒன்றியத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகவும், குடியாத்தம் ஒன்றியம் கூடநகரத்திற்கு சென்று சிகிச்சைபெறுமாறும் அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பாலாற்றில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால் கூட நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மக்கள் ஆற்றா கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் அகரம் சேரி, சின்னசேரி, கொல்லமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

கலெக்டர் உத்தரவு

இது குறித்து கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் துணை இயக்குனர் பானுமதி ஆகியோர் திடீரென பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அகரம் சேரி, சின்னசேரி கொல்லமங்கலம், பள்ளிகுப்பம், கூத்தம்பாக்கம் ஆகிய 5 ஊராட்சிகளில் இருந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இங்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். அவர்களை எக்காரணத்தைக் கொண்டும் கூடநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்யக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். ஆய்வின் போது பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி மன்ற தலைவர் சுப பிரியா குமரன், வார்டு கவுன்சிலர் நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Next Story