நடுவழியில் லிப்ட் பழுதாகி நின்றதால் 2 குழந்தைகள் உள்பட 5 ேபர் பரிதவிப்பு
நாகர்கோவிலில் திருமண மண்டபத்தில் லிப்ட் நடுவழியில் பழுதாகி நின்றால் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் ½ மணி நேரம் போராடி மீட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் திருமண மண்டபத்தில் லிப்ட் நடுவழியில் பழுதாகி நின்றால் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் ½ மணி நேரம் போராடி மீட்டனர்.
திருமண விழா
நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் மொத்தம் 2 தளங்களை கொண்டது. இங்கு நேற்று காலையில் ஒரு திருமண விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலர் லிப்ட் வழியாகவும், சிலர் படிக்கட்டு வழியாகவும் 2-வது தளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் வடசேரி கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த தங்கம் (வயது 62), பாப்பா (60), சங்கர் ராஜா மனைவி கவிதா (28), அவருடைய குழந்தைகள் ஆதித்யா (12), பிரனவி சங்கர் (2) என மொத்தம் 5 பேர் லிப்டில் 2-வது தளத்திற்கு சென்று கொண்டிருந்தனர். லிப்டை காவலாளி மணிகண்டன் இயக்கினார்.
நடுவழியில் நின்ற லிப்ட்
லிப்ட் முதல் தளத்தை தண்டி சென்ற ஓரிரு நொடிகளில் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் லிட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதை இயக்க பல வழிகளில் முயன்றும் முடியவில்லை. இதனால் அதில் சிக்கி இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து மண்டப நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பலமுறைகளில் முயற்சி மேற்கொண்டும் லிப்டை இயக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி துரை தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் லிப்ட் ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
½ மணி நேரம் போராடி மீட்டனர்
அவர்கள் இணைந்து லிப்டை தரை தளத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சுமார் ½ மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அதில் சிக்கி இருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அப்போது, மீட்கப்பட்ட அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் தீயணைப்பு வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட மண்டப நிர்வாகத்திடம் உடனடியாக லிப்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடுவழியில் நின்ற லிப்டில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.