காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது
நாட்டறம்பள்ளி அருகே காசு வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்பொழுது புதுப்பேட்டை அருகே கல்நார்சம்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் ஆடி கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது முட்புதரில் காசு வைத்து சூதாட்டம் ஆடி கொண்டிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சசி (வயது 31) பிரவீன்குமார்(32), கோவிந்தராஜி(23) சதீஷ்குமார் (வயது 32) மற்றும் பிரபாகரன் (34) என தெரியவந்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் 5 பேர் மீதும் காசு வைத்து சூதாடியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைதுசெய்தனர்.