நாட்டு துப்பாக்கியால் மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது
திருச்சி மாவட்டம், எதுமலை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி மான்களை வேட்டையாடிய சிறுவன் உள்பட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமங்களில் ஆடுகள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து ஆடுகளை திருடும் கும்பலை பிடிக்க போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் முக்கியமான பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வெள்ளனூர் அருகே குற்றப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த பயணிகள் ஏற்றி செல்லும் மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் இறந்த நிலையில் 3 மான்களின் உடல்கள் மற்றும் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனில் இருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வேட்டை மணி என்ற மணிகண்டன்(வயது 24), ராமச்சந்திரன்(30), வெள்ளனூர் கோவிந்தன் (33), கார்த்திக்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது.
வேட்டை
அவர்கள் 5 பேரும் திருச்சி மாவட்டம், எதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் மூலம் 3 மான்களை சுட்டு வேட்டையாடி அந்த இறைச்சியை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் வைத்திருந்த 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கிகளில் ஒன்று மணிகண்டனுக்கும், மற்றொன்று கோவிந்தனுக்கு சொந்தமானது என்றும், மினி வேன் கோவிந்தனுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் உள்பட 5 பேரையும் போலீசார் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் 3 மான்களின் உடல்களையும், மினி வேன், 2 நாட்டு துப்பாக்கிகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேட்டையாடப்பட்ட மான்கள் 3 வயது ஆண் மான், 8 மாத ஆண் மான் என்றும், 2 வயது பெண் மான் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
கைது
மான்களை வேட்டையாடிய வனப்பகுதி திருச்சி மாவட்டம், எதுமலை காப்புகாடு வனப்பகுதி என்பதால் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர், திருச்சி மாவட்ட வனத்துறையினரை வரவழைத்து, அவர்களிடம் 5 பேரையும் மற்றும் நாட்டு துப்பாக்கிகள், வேன் ஆகியவற்றை ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.