சேலத்தில் ரவுடியை கடத்திய வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது-போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலத்தில் ரவுடியை கடத்திய வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பிறப்பித்தார்.
பணம், செல்போன் பறிப்பு
சேலம் மிட்டாபுதூர் மணியகவுண்டர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 3-ந் தேதி மாமாங்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் கீழே இறங்கி கருப்பசாமியை வழிமறித்தது. பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2,500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்றது.
இதுதொடர்பாக கருப்பசாமி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கருப்பசாமியிடம் பணம் பறித்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 29), அன்னதானப்பட்டியை சேர்ந்த மணிமாறன் (32), கந்தப்பா காலனியை சேர்ந்த யுவராஜ் (33), கருப்பூரை சேர்ந்த கவுதம் (30), குகை பகுதியை சேர்ந்த நவீன்குமார் (33) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
போலீஸ் விசாரணையில், அவர்கள் மீது கடந்த 2-ந் தேதி நில விற்பனை மற்றும் பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக அழகாபுரம் புதூரை சேர்ந்த பிரபல ரவுடி பூபதி உள்பட 2 பேரை காரில் கடத்தி சென்று தாக்கியது தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. மேலும் பிரபாகரன் ஏற்கனவே கடந்த 2016, 2018-ம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபாகரன், மணிமாறன், யுவராஜ், கவுதம், நவீன்குமார் ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலனை செய்து அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டன.