5 பேருக்கு எலிக்காய்ச்சலா?
கடையம் பகுதியில் 5 பேருக்கு எலிக்காய்ச்சலா? என்பதற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் பதில் அளித்தார்
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரம் பகுதியில் சிறுவன் உள்பட சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அதில் 4 பேர் வீடு திரும்பினர். தொடர்ந்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் உத்தரவின்படி கடையம் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் ஆசீர்வாதபுரம் சென்று தூய்மை பணிகள் மேற்கொண்டனர். மேலும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதேபோல் கடையம் அருகேயுள்ள வீராசமுத்திரம் பகுதியை ஒரு சிறுமியும் காய்ச்சால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் 5 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இதுபற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இங்கு யாருக்கும் எலிக்காய்ச்சல் இல்லை. மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். ஒருவர் மட்டும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த காய்ச்சல், டெங்கு வகையை சேர்ந்்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.