காஞ்சீபுரத்தை சேர்ந்த 2 ரவுடிகள் உள்பட 5 பேர் கைது
காட்பாடியில் பதுங்கி இருந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த 2 ரவுடிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் சார்பில் கூறப்படுவதாவது:-
பணம் பறிக்கும் கும்பல்
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் இரவு நேரங்களில் ரவுடிகள் சுற்றித்திரிந்து வருவதாகவும், ஆந்திராவில் இருந்துவரும் லாரி டிரைவர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி மற்றும் விருதம்பட்டு போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்படி காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் விருதம்பட்டு பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
அப்போது சந்தேகத்திற்கு இடமாக விடுதியில் தங்கியிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜா என்கிற வசூல்ராஜா (வயது 36), மோகன் குமார் என்கிற வெள்ளை மோகன் (34), வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் (34), காங்கேயநல்லூரை சேர்ந்த சையத் மன்சூர் (38), கவுஸ் பாஷா (31) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்தி வரும் லாரியை வழிமடக்கி அந்த லாரியை செம்மரத்துடன் கடத்த சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது. இது குறித்து ரவுடிகள் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.