போலீஸ்காரர் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம்...! அமைச்சர் பெயரை கூறி கோடி கணக்கில் வசூல் பலே சவுமியா...!


போலீஸ்காரர் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம்...! அமைச்சர் பெயரை கூறி கோடி கணக்கில் வசூல் பலே சவுமியா...!
x
தினத்தந்தி 16 Sept 2022 1:58 PM IST (Updated: 16 Sept 2022 2:27 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் 5 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய இருந்த புது மாப்பிள்ளை கையும் களவுமாக காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார்.

கரூர்

கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருப்பூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தனக்கு கரூரில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நன்கு அறிமுகம் எனவும், தன்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று மாலை கரூரில் அந்த பெண்ணை பிடித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இதுபோன்று மோசடியில் ஏமாற்றியது உண்மைதானா? எத்தனை பேரிடம் இது மாதிரி ஏமாற்றியுள்ளார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதி விநாயகர் கோவில் சந்துவில் வசித்து வந்த சவுமியா என்ற சபரி. காந்திகிராமத்தில் வீடு எடுத்து வசித்து வரும் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சவுமியாவை மணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

தாம் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக சிவக்குமாரிடம் கூறிய சவுமியா தமக்கு அமைச்சரை தெரியும் என்றும் அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய சிவக்குமார் குடும்பத்தினர் 10 ஆயிரம் பணத்தை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர். மேலும், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதற்காக முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வரை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் கரூருக்கு வந்த சிவக்குமாரை அழைத்துச் சென்று அங்குள்ள பெரிய பங்களாவை காட்டி அது, தமது தாயாரின் வீடு என்றும் தாம் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் சவுமியா கூறியுள்ளார்.

இந்நிலையில் மணப் பெண் பற்றி விசாரிக்குமாறு கரூரில் உள்ள உறவினருக்கு சவுமியாவின் போட்டோ ஒன்றை சிவக்குமார் அனுப்பியுள்ளார். சவுமியாவின் பெற்றோரிடம் விசாரித்த போது தங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சவுமியா காட்டிய அந்த பெரிய பங்களாவும் அவருக்கு சொந்தமில்லை என்பதை தெரிந்து கொண்ட உறவினர் சிவக்குமாரிடம் இந்த தகவல்களை சொல்லி எச்சரிக்கை செய்துள்ளார். கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்தித்தபோது அவரும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சவுமியா தங்கி இருக்கும் வீட்டினுள் சென்று அவரை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் சௌமியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேரை திருமணம் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சவுமியா, வரும் ஞாயிறன்று சிவக்குமாரையும், அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை கோவையை சார்ந்த மற்றொரு இளைஞரையும் திருமண செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story