மாவு மில்லில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 5 பேர் கைது


மாவு மில்லில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 5 பேர் கைது
x

அரியமங்கலத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து 500 கிலோ அரிசி மற்றும் குருணை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

மாவு மில்லில் சோதனை

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், துணை சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நேற்று அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள அப்துல்ரகுமான் மாவு மில்லில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

5 பேர் கைது

அப்போது அங்கு ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து மாவாகவும், குருணையாகவும் அரைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கு 50 கிலோ எடை கொண்ட 7 சாக்கு மூட்டைகளில் 350 கிலோ ரேஷன் அரிசியும், 50 கிலோ எடை கொண்ட 3 சாக்கு மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசியை உடைத்த குருணையும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குருணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அரியமங்கலத்தை சேர்ந்த சுலைமான் மகன் இஸ்மாயில், மாவு மில் உரிமையாளரான அப்துல்ரகுமானின் மனைவி ரசூல்பீவி, அரியமங்கலத்தை சேர்ந்த பூபதி, சதாம்உசேன், அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல்லா மகன் இஸ்மாயில் ஆகியோர் ரேஷன் அரிசி மற்றும் குருணையை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து அரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story