முள்ளம் பன்றியை வேட்டையாடிய வக்கீல்கள் உள்பட 5 பேர் கைது
ஆரல்வாய்மொழி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வக்கீல்கள் உள்பட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வக்கீல்கள் உள்பட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
முள்ளம் பன்றி வேட்டை
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம் பன்றி வேட்டையாடப்படுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெற்கு கருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பேர் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். வன ஊழியர்களை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே வன ஊழியர்கள் இருவரையும் மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில் நாட்டு துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தி இருந்தது தெரியவந்தது.
வக்கீல்கள் கைது
இதனை தொடா்ந்து வனஅதிகாரிகள் அந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஜோஸ் மற்றும் ஜான் பெர்லின் என்பதும் அந்த பகுதியில் முள்ளம் பன்றி ஒன்றை வேட்டையாடி கொன்றதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி, வேட்டையாடிய முள்ளம்பன்றி ஆகியவற்றையும் வனத்துைறயினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முள்ளம் பன்றியை வேட்டையாடியதில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வக்கீல்கள் இளம்முருகு மார்த்தாண்டன், சுப்பிரமணி, என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வக்கீல்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.