5 பேருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


5 பேருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கத்திக்குத்து

சங்கரன்கோவில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலை சதுரன் மகன் சாலை முனீஸ் (வயது 25). இவரும், அவரது உறவினர் அருள் முருகன் மகன் சரவணன் (27) ஆகிய இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஓடைத்தெருவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சோலைவேல் (25), கருப்பசாமி மகன் கதிர்வேல் ஆகிய இருவரும் நடந்து சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வழிவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் சாலை முனீஷ், சரவணன் ஆகியோருக்கும், சோலைவேல், கதிர்வேல் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கதிர்வேல் தரப்பினர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாலை முனீசை குத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த சரவணன் (27), உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (32), பாலகிருஷ்ணன் மகன் வீரபாண்டி (41), கிருஷ்ணசாமி மகன் சாமிநாதன் (30) ஆகியோரையும் கத்தியால் குத்தி உள்ளனர்.

வாலிபர் கைது

இதில் காயமடைந்த சாலை முனீஷ், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியிலும், படுகாயமடைந்த மாரிமுத்து, வீரபாண்டி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயமடைந்த சரவணன், சாமிநாதன் ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இதுகுறித்து சாலை முனீஸ் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய கதிர்வேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story