5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கொலை வழக்கு

கழுகுமலை தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் கனகராஜ் (வயது 38). இவரை கழுகுமலை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்த பூல்பாண்டி மகன் காளிப்பாண்டி என்ற காளி (28) என்பவரை ஒரு கொலை வழக்கில் கயத்தாறு போலீசார் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். தூத்துக்குடி முருகேசன்நகரை சேசர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் (22) என்பவரை சிப்காட் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். மேலும் விளாத்திகுளம் சங்கரலிங்கபுரம் ரகுராமபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (48) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கில் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கனகராஜ், காளிப்பாண்டி என்ற காளி, காளியப்பன் என்ற காடை காளியப்பன், கார்த்திக், கண்ணன் ஆகிய பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

256 பேர் கைது

நடப்பு ஆண்டில் இதுவரை போக்கோ வழக்குகளில் ஈடுபட்ட 14 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட் 42 பேர் உள்பட மொத்தம் 256 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story