திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் நகையை மீட்டுகொடுத்த சிப்பி தொழிலாளிகள்
திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் நகையை சிப்பி தொழிலாளிகள் மீட்டு ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை 2 நாட்களுக்கு பின் சிப்பி அரிக்கும் தொழிலாளிகள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
கடலில் தவறிய நகை
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தொழில் அதிபரான இவர் கடந்த 1-ந் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது குடும்பத்துடன் கடலில் நீராடும் போது அவரது மகன் ஸ்ரீராம் (22) கையில் அணிந்திருந்த 5 பவுன் தங்க காப்பு கடலில் தவறி விழுந்து விட்டது. உடனடியாக அங்கிருந்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் தங்கக்காப்பு கிடைக்கவில்லை. பின்னர் கார்த்திக் குடும்பத்துடன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பி ெசன்று விட்டார்.
நகை ஒப்படைப்பு
இந்நிலையில் தொடர்ந்து கடலில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடல் பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் 5 பவுன் தங்க காப்பினை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் கார்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று காலையில் திருச்செந்தூர் வந்த கார்த்திக்கிடம் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் தங்க காப்பினை ஒப்படைத்தனர். இதற்காக கார்த்திக் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடல் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.