தமிழகத்தில் ஒரே வாரத்தில் 5 பள்ளி - கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை
தமிழகத்தில் அண்மைக்காலமாக மாணவிகளின் தற்கொலைப் படலங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
சென்னை,
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோகம் முடிவதற்குள், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபி மகள் சிவகாமி (வயது 17). இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவகாமி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து, திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் உடல் அவரது சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது இளைய மகள் யோகலட்சுமி (வயது17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் மாணவர்களின் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சம்பவங்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் தற்கொலைப் படலங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
சிவகங்கை: பெற்றோர் திட்டியதால் மாணவர் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சுடர் ராஜ்-மேகலா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய இளைய மகன் சாக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவரால் சரிவர படிக்க முடியவில்லை. இதனால், பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது மாணவனின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டணம் கட்ட முடியாத நெல்லை களக்காடு கல்லூரி மாணவி தற்கொலை
மாணவிகளின் தற்கொலைப் படலங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பாப்பா. நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை அவரது தந்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்துள்ளார்.
இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி பாப்பா மன வேதனை அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவை உள்புறமாக பூட்டிக் கொண்ட 18 வயது பாப்பா, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.