வாடகை பாக்கி வைத்த 5 கடைகளுக்கு 'சீல்'
நாகர்கோவில் மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்த 5 கடைகளுக்கு ‘சீல்'
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான பெதஸ்தா வணிக வளாகத்தில் 48 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 5 கடைக்காரர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் ரூ.5.75 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீசும் வழங்கியிருப்பதாக தெரிகிறது. ஆனாலும் வாடகையை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் சம்பந்தப்பட்ட கடைகளை 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்படி மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம்மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையா, ஞானப்பா உள்ளிட்டோர் நேற்று பெதஸ்தா வணிக வளாகத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக் கடை, அச்சகம், கிளினிக் உள்ளிட்ட 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.