இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 5 இலங்கை மீனவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசில் ஒப்படைப்பு


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 5 இலங்கை மீனவர்கள் கடலோர பாதுகாப்பு போலீசில் ஒப்படைப்பு
x

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் கடலோர பாதுகாப்பு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று முன்தினம் கடலோர காவல்படையை சேர்ந்த 'ஷவுர்யா' ரோந்து கப்பலில் ரோந்து சென்றபோது தூத்துக்குடியில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது.

உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அதில் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த மார்க்ஸ் ஜூட், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகிய 5 பேரும் இருந்தனர். அந்த படகில் 270 கிலோ மீன்களும் இருந்தன.

விசாரணை

தொடர்ந்து கடலோர காவல்படையினர் இலங்கை மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

அங்கு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையத்தில் இலங்கை மீனவர்களிடம் கியூ பிரிவு போலீசார் உள்பட பல்வேறு உளவுப்பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர்.

காற்று காரணமாக..

அப்போது, கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், சீதோஷ்ண நிலை காரணமாகவும் வழி தவறி இந்திய எல்லைக்குள் படகு வந்து விட்டதாக பிடிபட்ட மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதன்பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்களை ராமநாதபுரம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர்கள் இன்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட உள்ளனர்.


Next Story