பள்ளிக்கு சென்ற 5 மாணவர்கள் மாயம்
சேலத்தில் பள்ளிக்கு சென்ற 5 மாணவர்கள் மாயமானதால், அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பள்ளி மாணவர்கள்
சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், ரெட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இதேபள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் 10-ம் வகுப்பும், அவரின் தம்பியான 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மற்றொரு சகோதரர்களான 15, 13 வயதான சிறுவர்களும் படித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடுகளுக்கு திரும்பவில்லை.
இதனிடையே, பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு அந்த சிறுவர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, நாங்கள் இனிமேல் படிக்க மாட்டோம். இதனால் எங்களை தேட வேண்டாம். பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
தேடுகிறார்கள்
இதைத்தொடர்ந்து அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுவர்கள் எங்கு சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் 5 மாணவர்கள் எங்கிருந்து செல்போன் எண்ணில் பேசினர்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை தேடி வருகிறார்கள்.