ஊத்தங்கால் கிராமத்தில் ஒரே நாளில் 5 கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


ஊத்தங்கால் கிராமத்தில்    ஒரே நாளில் 5 கோவில் கும்பாபிஷேகம்    ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஊத்தங்கால் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 5 கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

கம்மாபுரம்,

கும்பாபிஷேகம்

விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வர சித்தி விநாயகர், ஆவுடைநாயகி சமேத ஆவுடையப்பர் கோவில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மகாசக்தி மாரியம்மன், முனீஸ்வரர், லாட சன்னியாசி வீரன் ஆகிய கோவில்களில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகங்களில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 9-ந்தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கியது. மேலும் அன்றைய தினம் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, தீப பூஜை, கண்ட பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தது. 10-ந் தேதி காலையில் சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலா கர்சனம், யாகசாலையில் முனீஸ்வரன் பிரவேசம், முதற்கால பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் 2-ம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சிகளும், மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜை, மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம்

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4-ம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாம கர்ணம், 4-ம் கால பூர்ணாகுதி முடிந்தவுடன் புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வரசித்தி விநாயகர் கோவில், மகாசக்தி மாரியம்மன் கோவில், ஆவுடை நாயகி சமேத ஆவுடையப்பர் கோவில், முனீஸ்வரர் கோவில், லாட சன்னியாசி வீரன் ஆகிய கோவில்களின் கோபுர விமான கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தீயணைப்பு வாகனம் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு மூலவர் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி உதயகுமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story