செல்போன் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
செல்போன் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
நாகா்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்தவர் ஆயிஷா முலாசின். இவர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள ஒரு செல்போன் கடையில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போன் வாங்கினார். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே செல்போன் வேலை செய்யவில்லை. எனவே செல்போனை சரி செய்து தருமாறு கடைக்காரரிடம் கொடுத்துள்ளார். அப்போது, இது வெறும் சாப்ட்வேர் பிரச்சினை தான் என்றும், உடனடியாக சரி செய்து தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் மீண்டும் செல்போன் சரியாக வேலை செய்யவில்லை. பின்னர் மீண்டும் செல்போன் கடைக்காரரை அணுகியபோது, தயாரிப்பு பிரச்சினை என்று கூறி செல்போனை கொடுத்து விட்டனர். ஆனால் செல்போனில் மீண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கு ஆயிஷா முலாசின் நோட்டீஸ் அனுப்பினார். எனினும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் செல்போன் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ஒரு புதிய செல்போன், அபராத தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.2500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.