திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பா- தாளடி சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 40,737 எக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38,552 எக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 7,654 எக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 86,943 எக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தாளடி பருவத்தில் 9,637 எக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 38,115 எக்டேரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 13,624 எக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 61,376 எக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடை
இந்த நிலையில் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், எந்திரத்தின் மூலம் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. அரசு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது சரசரியாக ஏக்கருக்கு 25 மூட்டைக்கு குறையாமல் மகசூல் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அறுவடை பணிகள் முழுமையாக நடைபெற்றால் தான் மகசூலை கணக்கிட முடியும் எனவும் தெரிவித்தனர். அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளார் ராஜராஜன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 501 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
5 ஆயிரம் டன்
இதுவரை 5 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர், முதுநிலை மண்டல மேலாளர், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் செல்போன் எண்கள் அச்சிடப்பட்ட விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.