திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர். விநாயகர் கோவில்களில் மக்கள் காலை முதல் அதிக அளவில் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். திருப்பூர் மாநகரில் நேற்று இந்து முன்னணி சார்பில் 1,200 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் முன் 11 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவனுடன் இருக்கும் வகையில் அனுமன் தூக்கி செல்வது போல், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர், யானை வாகன விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், கருட விநாயகர் என பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
5 ஆயிரம் சிலைகள்
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், மதியம் அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார்கள். ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்கள் வந்து விநாயகரை வழிபட்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதுபோல் இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி, விஷ்வ இந்து பரிசத் அமைப்பு சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (வியாழக்கிழமை) குன்னத்தூர், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கயம், குண்டடம் பகுதியில் ஊர்வலம் நடந்து சிலைகள் கரைக்கப்படுகிறது.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை
நாளை (வெள்ளிக்கிழமை) அவினாசி, தாராபுரம், வெள்ளகோவில், மூலனூர், பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளிலும், 3-ந் தேதி திருப்பூர் மாநகரம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு கரைக்கப்படுகிறது.திருப்பூர் மாநகரில் 3-ந் தேதி மாலை பி.என்.ரோடு திருப்பூர் புதிய பஸ் நிலையம், மங்கலம் ரோடு செல்லம்நகர் பிரிவு, தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகில் ஆகிய இடங்களில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி பின்னர் இரவு ஆலாங்காட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். அதன்பிறகு சாமளாபுரம் குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 4 பட்டாலியன் போலீசார், 200 பயிற்சி போலீசார் உள்பட மொத்தம் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.