5 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார்
கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் 5 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் 5 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயாராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
மக்கும் குப்பைகள்
கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா குன்னூர் செல்லும் சாலையோரத்தில் உள்ளது. 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவில், குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டிடம், மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் மையம், வாழை இலைகளை சிறு துகள்களாக அரைக்கும் எந்திரம், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அரைக்கும் எந்திரம், மாதிரி காய்கறி தோட்டம், பூந்தோட்டம் போன்றவை உள்ளன.
கடந்த மாதம் மக்காத குப்பைகளை பிரித்து எடுப்பதற்காக ரூ.40 லட்சம் செலவில் புதிய எந்திரம் பொருத்தப்பட்டது. பேரூராட்சியில் 21 வார்டுகளில் சேகரமாகும் கழிவுகள், குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. பின்னர் வளம் மீட்பு பூங்காவிற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் 4 டன் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது.
5 டன் இயற்கை உரம்
இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தோட்டக்கலைத்துறை இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருவதால், இயற்கை உரத்தை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 டன் இயற்கை உரம் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறியதாவது:-
கோத்தகிரி நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. தற்போது பூங்காவில் 5 டன் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு, கிலோ ரூ.10-க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் இயற்கை உரத்தை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.