5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை நகரில் மகாதானத் தெரு, பெரியகடை வீதி, கச்சேரி சாலை, கூறைநாடு ஆகிய பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனம், உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாவட்ட கலெக்டர் ரூ.ஒரு லட்சம் வரை அபராதம் விதித்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:

5 டன் பறிமுதல்

தமிழக அரசால் 16 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது ஒரு சில கடைகளில் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 டன் அளவு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் அபராதம்

தொடர்ந்து மகாதானத் தெருவில் உள்ள மதுபான பாரில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த பாரில் சுகாதாரம் கடைபிடிக்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பார் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவற்றை பயன்படுத்துவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சால்வை அணிவித்து கவுரவம்

முன்னதாக பெரிய கடை வீதியில் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது இங்கு பிளாஸ்டிக் விற்பனை இல்லை என விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்த கடையில் சோதன மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

சோதனையின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story