2 சரக்கு ஆட்டோக்களில் விற்பனைக்கு எடுத்து வரப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
2 சரக்கு ஆட்டோக்களில் விற்பனைக்கு எடுத்து வரப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பட்டுக்கோட்டை அருகே 2 சரக்கு ஆட்டோக்களில் வெளிச்சந்தையில் விற்பனைக்காக 5 டன் ரேஷன் அரிசியை எடுத்து வந்த போது போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
ரேஷன் அரிசி
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண், பொது வினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 டன் பறிமுதல்
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிகுளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மற்றொரு சரக்கு ஆட்டோ டிரைவரான பட்டுக்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்த முகமது அனீபா மகன் அலாவுதீன் (வயது 28) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ஒரு சரக்கு ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 48 மூட்டைகளில் 2,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
5 டன் அரிசி பறிமுதல்
மற்றொரு சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 50 கிலோ எடை கொண்ட 54 மூட்டைகளில் 2,700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அந்த பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக எடுத்து வந்த போது போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து 2 சரக்கு ஆட்டோக்களிலும் 102 மூட்டைகளில் இருந்த 5 ஆயிரத்து 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 சரக்கு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அலாவுதீனை கைது செய்தனர்,
2 பேருக்கு வலைவீச்சு
மேலும் தப்பி ஓடிய சரக்கு ஆட்டோக்களின் உரிமையாளரும், அரிசி வாங்கி விற்பனை செய்பவருமான பட்டுக்கோட்டை புது ரோடு பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி (50), சரக்கு ஆட்டோ டிரைவர் முத்துப்பேட்டையை சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.