பழங்குடியின மாணவர்கள் 5 பேர் கலெக்டரிடம் வாழ்த்து


பழங்குடியின மாணவர்கள் 5 பேர் கலெக்டரிடம் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்கள் 5 பேர் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்கள் 5 பேர் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

5 மாணவர்கள்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, இஸ்ரோ 75 செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரிக்கையூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ராஜன், மாணவி ரேவதி, கெங்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர் சரவணன், மாணவி மஞ்சுளா, கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சரவணன் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த 5 பேரும் பழங்குடியின மாணவ-மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டரிடம் வாழ்த்து

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, செயற்கைகோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைகோள் தயாரிப்பு, அதன் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். மாணவ-மாணவிகள் இணையதள வசதி மற்றும் சிக்னல் கிடைக்காத கிராமங்களில் வசித்ததால் பள்ளி தலைமை ஆசிரியர், அவர்கள் எடுக்கும் பாடங்களை பதிவிறக்கம் செய்து, கற்பித்து வந்தார்.

இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5-ந் தேதி வரை மாணவர்கள் 5 பேருக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் மூலம் செயற்கைகோள் தயாரிப்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. நேற்று மாணவ-மாணவிகள் 5 பேரும் கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன், கரிக்கையூர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் ஆகியோர் ஊட்டியில் கலெக்டர் அம்ரித்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கலெக்டர் பாராட்டினார்.

பங்கேற்க வாய்ப்பு

இதுகுறித்து கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன் கூறும்போது, இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பழங்குடியின மாணவ- மாணவிகளை பங்குபெற வைக்க வேண்டும் என்பதற்காக தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் இஸ்ரோவிடம் அனுமதி பெற்றோம். மாணவர்கள் 5 பேருக்கு 2 நேர்முக வகுப்புகள் நடைபெற உள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு சென்று வகுப்புகளில் கலந்துகொண்டு, செயற்கைகோள் தயாரிப்பு முறைகள் குறித்து நேரில் பார்வையிடவும், செயற்கைகோள் ஏவப்படும் நாளில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார்.


Next Story