குமரியில் 5 வகை குற்ற சம்பவம் அதிகமாக நடக்கிறது


குமரியில் 5 வகை குற்ற சம்பவம் அதிகமாக நடக்கிறது
x

குமரியில் 5 வகை குற்ற சம்பவம் அதிகமாக நடக்கிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் 5 வகை குற்ற சம்பவம் அதிகமாக நடக்கிறது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

33 போலீஸ் நிலையங்களில் கேமராக்கள்

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள 4 மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட மொத்தம் 33 போலீஸ் நிலையங்களின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்கள் மற்றும் அதனை முறையாக பதிவு செய்யும் போலீசாரின் நடவடிக்கை ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.

இதற்காக சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 10 டி.வி. அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருவார்கள். மேலும் போலீஸ் நிலைய வளாகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களும் இதன் மூலம் கண்டறிய முடியும்.

5 வகை குற்றச்சம்பவங்கள்

கடந்த 4 வருட குற்றப்பதிவேடுகளை பார்க்கும் போது 5 வகை குற்ற சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக 400 புகார்கள் வந்துள்ளன.

இதேபோல் பண மோசடி 796 வழக்குகளும், வரதட்சணை தொடர்பாக 100 வழக்குகள், அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் 580, நில மோசடியில் 400 வழக்குகளும் வந்துள்ளன. வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்குகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் வெளிவரும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் நம்பகத் தன்மை முதலில் அறியப்படும். அது போலியாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலமோசடி தடுப்பு வாராந்திர கூட்டம்

நில மோசடி வழக்குகளை குறைக்கும் வகையில் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில மோசடி அபகரிப்பு தடுப்பு கூட்டம் நடத்தப்படும். இதில் வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, நில அளவையர் துறை மற்றும் போலீசார் கலந்து கொண்டு போலீஸ் நிலையங்களில் உள்ள நிலமோசடி வழக்கு தொடர்பாக விவாதிக்கப்படும். அதில் குற்றங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கந்துவட்டி மீது கடும் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 10,716 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 2,000 மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் முறை ரூ.2 ஆயிரமும், தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளுக்கு ரூ.24 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுகிறது.

மேலும் போலீசாரின் எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வரும் லாரியின் உரிமையாளர் மீது 107, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் கந்து வட்டி புகார்கள் இதுவரை 3 மட்டும் வந்துள்ளன. கந்து வட்டியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story