கும்பாபிஷேக விழாவில் 10 பவுன் நகை பறித்த 5 பெண்கள் சிக்கினர்


கும்பாபிஷேக விழாவில் 10 பவுன் நகை பறித்த 5 பெண்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொல்லியங்குணம் சுந்தரவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் 10 பவுன் நகை பறித்த 5 பெண்கள் சிக்கினர்.

விழுப்புரம்

மயிலம்:

மயிலம் கொல்லியங்குணத்தில் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கூட்டநெரிசல் இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி மயிலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மனைவி லட்சுமி காந்தன், கணபதிபட்டு கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் மனைவி மலர்விழி, ஆறுமுகம் மனைவி தேவி ஆகிய 3 பேரிடம் மொத்தம் 10 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்தனர்.

சிறிது நேரத்தில் நகைகளை காணாமல் பதறிய 3 பெண்களும் கூச்சலிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நகைகளுடன் 5 பெண்கள் நைசாக நடந்து சென்றனர். இதை பார்த்த போலீசார், 5 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

5 பெண்களிடம் விசாரணை

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கோரிக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி, சங்கர் மனைவி ஜெயந்தி, ஆசைத்தம்பி மனைவி கஸ்தூரி, திருச்சி மாவட்டம் கிராப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா, திருவாரூரை சேர்ந்த துரைராஜ் மனைவி ராசாமணி ஆகியோர் என்பதும், 3 பெண்களிடம் நகைகளை பறித்ததும் தெரியவந்தது. மேலும் 5 பேரும், இது போன்று மக்கள் கூடும் நிகழ்ச்சியை முன்கூட்டியே அறிந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story