மனைவியை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகா்கோவில்,
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுபியா (25) என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் 15-5-2016 அன்று அவர்களுக்கிடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனைக்கு ஆளான சுபியா, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு வீட்டில் உள்ள சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளிக்கு சிறை
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபியாவை தற்கொலைக்கு தூண்டியதாக தொழிலாளி வேல்முருகனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். அதில், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வேல்முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.