திறக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது: படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?


திறக்கப்பட்டு  5 ஆண்டுகள் ஆகிறது:  படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்  பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
x
தினத்தந்தி 25 Sept 2022 1:00 AM IST (Updated: 25 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு

அவல்பூந்துறை படகு இல்லம் திறக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே படகு இல்லத்தை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

205 ஏக்கர்

மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குளூர் ஊராட்சியில் ஒரு பகுதியும், அவல்பூந்துறை பேரூராட்சியில் ஒரு பகுதியும் என மொத்தம் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.

இந்த குளத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் வடிந்து தண்ணீர் வருகிறது. இந்த குளத்தைச் சுற்றி ஒரு பகுதியில் கருவேலம் மரங்களும், மற்றொரு பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளது.

நிதி ஒதுக்கீடு

இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. இதேபோல் விவசாய கிணறுகள், ஆழ்துழாய் கிணறுகள் போன்றவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. மேலும் அவல்பூந்துறை குளத்திற்கு அருகில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளதால் அங்கிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்துக்கு வந்து இரைதேடிச்செல்கின்றன.

இந்தநிலையில் அவல்பூந்துறை குளத்தில் படகு இல்லம் அமைப்பதற்காக அரசின் சார்பில் கடந்த 2013- 2014-ம் ஆண்டு ரூ.1 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

படகு இல்லம் திறப்பு

இதைத்தொடர்ந்து படகு இல்லம் அமைப்பதற்காக குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் ஆங்காங்கே தண்ணீர் இருந்ததால் சமன் செய்யும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வற்றியதை அடுத்து மீண்டும் குளத்தை ஆழப்படுத்தி சமன்செய்யும் பணி நடைபெற்றது.

மேலும் படகு இல்லத்திற்கு தேவையான பூங்கா, பார்வையாளர்கள் அமர்வதற்கான செட், மேல்நிலை குடிநீர் தொட்டி, பார்வையாளர்கள் நின்று பார்ப்பதற்கான மேடைகள், ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் மற்றும் அவல்பூந்துறை மெயின் ரோட்டில் படகு இல்லம் என்ற ஆர்ச் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மெயின்ரோட்டில் இருந்து படகு இல்லம் வரை கான்கிரீட் சாலை, ஏற்காட்டில் இருந்து 2 படகு என படகு இல்லத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படகு இல்லத்தை திறந்து வைத்தார்.

கோரிக்கை

ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமலும், சமன்படுத்தாமலும் இருந்ததால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை படகு இல்லம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது. இதனால் படகு இல்லத்தில் உள்ள பூங்கா, அலங்கார வளைவுகள், தண்ணீர் தொட்டிகள், பயணிகளின் ஓய்வு கூடாரங்கள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முட்கள் நிறைந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.

படகு இல்லத்தை விரைந்து சீரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவல்பூந்துறை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுமக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story