கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 வாலிபர்கள் கைது
பாளையங்கோட்டையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாளையங்கோட்டையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் ரோந்து
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் கக்கன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கீழநத்தம் வடக்கு பைபாஸ் ரோடு பகுதியில், கங்கைகொண்டானை சேர்ந்த ஆறுமுகம் (வயது 23), பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்த சூர்யா (20), தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த இசக்கி ராஜா (21), தெற்கு பஜாரை சேர்ந்த சிவா மகாராஜன் (22) மற்றும் ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் (25) ஆகிய 5 பேர் ஒன்றாக நின்றனர்.
கூட்டுக் கொள்ளை
அவர்கள், கஞ்சா விற்பதற்கு பணம் தேவைப்படுவதால் அந்த பணத்தை ரோட்டில் செல்பவர்களிடம் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு, அந்த பணத்தை கொண்டு மதுரையில் கஞ்சா வாங்கி வந்து விற்கலாம் என பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சை ரகசியமாக கேட்ட போலீசார், 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.
அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 அரிவாள்கள் மற்றும் 1 இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.