50 குழந்தைகளுக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன்
பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய 50 குழந்தைகளுக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்றுள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர்.
பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய 50 குழந்தைகளுக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்றுள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர்.
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறவியிலேயே செவித்திறன் இல்லாத குழந்தைகளுக்கு மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையம் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பிறவிலேயே செவித்திறன் இல்லாத 50 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு நவீன காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம், இக்குழந்தைகள் பேச்சுத் திறன் பெற்று, நல்ல நிலையில் உள்ளனர்.
இந்த நவீன சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும். இதை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இலவசமாக சிகிச்சை அளிப்பதன் மூலம், குழந்தைகளுக்கு பலன் அளித்து வருகிறது. இப்போது, அக்குழந்தைகள் நன்றாகப் பேசுகின்றனர்.
50 குழந்தைகள்
இந்த ஆஸ்பத்திரியில் இதுவரை 50 குழந்தைகளுக்கு நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 18 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர், மயக்க மருந்து நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அனைவருக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூய்மை பணியாளர்களின் நலன் கருதி தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் ஏறக்குறைய 165 பேருக்கும், மருத்துவக்கல்லூரியில் 270 பேருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 57 வயதுடைய ஒரு பெண் தனது சிறுநீரகத்தை தனது 37 வயது மகனுக்கு தானமாக வழங்க முன் வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து பெற்று, அவரது மகனுக்கு பொருத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிலைய மருத்துவஅலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரீஷ், மாதேஷ், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவுத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத் தலைவர் கிருத்திகா ஆகியோர் உடனிருந்தனர்.