பொதுமக்கள் வசதிக்காக ரூ.6 லட்சத்தில் 50 கிரானைட் இருக்கைகள்


பொதுமக்கள் வசதிக்காக ரூ.6 லட்சத்தில் 50 கிரானைட் இருக்கைகள்
x

வேலூர் கோட்டையில் பொதுமக்கள் வசதிக்காக ரூ.6 லட்சத்தில் 50 கிரானைட் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகிறது.

வேலூர்

வேலூர் கோட்டையில் பொதுமக்கள் வசதிக்காக ரூ.6 லட்சத்தில் 50 கிரானைட் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகிறது.

சுற்றுலா பயணிகள்

வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானவர்கள் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர். வேலூர் கோட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழமை மாறாமல் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. கோட்டை மதில்சுவர் இரவிலும் ஒளிறும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கோட்டை வளாகத்திற்குள் ஏராளமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட மக்கள் வரும் கோட்டையில் மக்கள் உட்கார போதிய இருக்கைகள் இல்லாமல் உள்ளதாக வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

50 இருக்கைகள்

இந்த நிலையில் கோட்டையில் நடைபயிற்சி செல்லும் மைதானத்தைச் சுற்றி இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 50 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கோட்டை வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்கட்டமாக வரவழைக்கப்பட்டுள்ள 25 கிரானைட் கற்களை பார்வையிட்டனர்.

பின்னர் இதுகுறித்து மேயர் சுஜாதா கூறியதாவது:-

கோட்டையின் உள்ளே நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இருக்கைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்கள் அமர வசதியாக 50 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த இருக்கைகள் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. மேலும் கோட்டை வளாகத்திற்குள் கூடுதலாக 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

கோட்டை சுற்றுச்சாலையில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்படும். அங்கும் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என்றார்.

அதிகாரிகள் கூறுகையில், கோட்டையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மதில்சுவரை சாலையில் செல்லும் பொதுமக்கள் பார்ப்பதற்காக மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும் என்றனர்.


Next Story