நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு-மாடுபிடி வீரர்கள் 50 பேர் காயம்


நாகியம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 575 காளைகள் களம் இறக்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 50 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்

தம்மம்பட்டி:

ஜல்லிக்கட்டு

தம்மம்பட்டி அடுத்துள்ள நாகியம்பட்டியில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. தம்மம்பட்டி-ஆத்தூர் செல்லும் சாலையில் அகதிகள் முகாம் எதிரில் தனியார் இடத்தில் நடந்த இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கலெக்டர் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

முதலில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதை மரபுப்படி யாரும் பிடிக்கவில்லை. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, துறையூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், மதுரை உள்பட 70-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து சுமார் 650 காளைகள் நாகியம்பட்டிக்கு அழைத்து வரப்பட்டு இருந்தன. அதில் 575 ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், 250 மாடுபிடி வீரர்கள் 8 சுற்றுகளாக பிரித்து அதில் ஒவ்வொரு சுற்றில் 25 மாடுபிடி வீரர்கள் என களத்திற்கு சென்றனர். அப்போது சீறி வந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு தங்கள் வீரத்தை காட்டி பரிசுகளை வாங்கி சென்றனர். இதைப் பார்த்த பார்வையாளர்களும் மாடு பிடி வீரர்களுக்கு உற்சாகப்படுத்தும் விதமாக விசில் அடித்தும், கைத்தட்டியும் வீரர்களை உற்சாகம் அளித்தனர்.

50 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காயம் ஏற்பட்ட 27 பேருக்கு மருத்துவ உதவி மையம் மூலம் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் மணிவாசகம் (வயது20), தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்லமுத்து மற்றும் பார்வையாளர்கள் சத்தீஸ்வரன் (16), நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (45) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தம்மம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மாலை 6 மணியளவில் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.


Next Story