கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்
வேலூர் மீன்மார்க்கெட், சத்துவாச்சாரியில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மீன்மார்க்கெட், சத்துவாச்சாரியில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் சோதனை
வேலூர் மாவட்டத்தில் ரசாயனம் தடவிய மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மீன்கடைகளில் சோதனை செய்யும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார், மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தவேல், சிவமணி ஆகியோர் வேலூர் மீன்மார்க்கெட்டில் திடீரென சோதனை செய்தனர்.
அங்குள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் சில கடைகளில் மீன்களின் செதில்கள் கருப்பு நிறமாக மாறி கெட்டு போய் இருந்தன. மேலும் நீண்ட நாட்களாக ஐஸ் பாக்சில் வைத்த மீன்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தடை செய்யப்பட்ட அணை மீன்களும் விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து கெட்டு போன மற்றும் அணை மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
50 கிலோ மீன்கள் பறிமுதல்
தொடர்ந்து சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் அருகே சென்னை-பெங்களூரு அணுகுசாலையோரம் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகளிலும் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மீன்மார்க்கெட், சத்துவாச்சாரி மீன்கடைகளில் செய்யப்பட்ட சோதனையில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 4 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரசாயனம் தடவிய மீன்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது போன்று சோதனை அனைத்து மீன்கடைகளிலும் நடத்தப்படும். மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு இருந்தால் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.