50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
திருவாரூர் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கெட்டுப்போன இறைச்சியை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கெட்டுப்போன இறைச்சியை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் நகரில் அசைவ உணவகங்களில் தரமான உணவு தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில், நகராட்சி துப்புரவு அலுவலர் மூர்த்தி, துப்பரவு ஆய்வாளர்கள் தங்கராமு, ரவிச்சந்திரன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அசைவ கடைகளில் குளிர்சாதன பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கோழிக்கறி, இறால் மீன் போன்றவைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சில கடைகளில் கெட்டுப்போன தரமற்ற கோழிக்கறி, மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
50 கிலோ பறிமுதல்
இதையடுத்து பொதுமக்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் தரமற்ற 50 கிலோ கோழிக்கறி, மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மல்லிகா கூறுகையில், அசைவ உணவகங்களில் தரமான உணவுகளை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற கோழிக்கறி, மீன்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதைமீறி தரமற்ற உணவுகளை வியாபாரிகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்றார்.