672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி
672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி
தஞ்சையில் நடந்த குடியரசு தின விழாவில் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
குடியரசு தின விழா
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கவுரவித்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் சமாதான புறா மற்றும் மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.
பின்னர் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 8 ஆயிரத்து 965 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 141 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி
விழாவில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்குரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 602 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 15 ஆயிரத்து 890 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாட்கோ சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 71 ஆயிரத்து 575 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.50 லட்சத்து 8 ஆயிரத்து 965 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.