50 குரங்குகள் கூண்டில் சிக்கின
சேரங்கோட்டில் அட்டகாசம் செய்த 50 குரங்குகள் கூண்டில் சிக்கின.
பந்தலூர்,
பந்தலூர் அருகே சேரங்கோடு பஜார் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் பகலில் கூலி வேலைக்கு சென்ற பின்னர், குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன. அவை வீட்டில் இருக்கும் சாப்பாடு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தியது. மேலும் கடைகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, பிஸ்கட் போன்றவற்றை நாசப்படுத்தி வந்தன. குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கன் வனத்துறையினருக்கு மனு கொடுத்தனர். இதையடுத்து சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் அறிவுரையின்படி, வனவர் ஆனந்த், வன காப்பாளர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குரங்குகளை பிடிக்க சேரங்கோடு பஜாரில் 2 கூண்டுகளை வைத்தனர். இதற்கிடையே நேற்று அந்த கூண்டுகளுக்குள் 50 குரங்குகள் சிக்கின. அதன் பின்னர் வனத்துறையினர் கூண்டுகளுடன் குரங்குகளை வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதியில் குரங்குகளை பாதுகாப்பாக விட்டனர். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.