மதுரையில் புதிதாக 50 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
மதுரையில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
மீண்டும் கொரோனா
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று புதிதாக 2533 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து, தினசரி பாதிப்பு 50-ஐ தொட்டுள்ளது. நேற்று புதிதாக 50 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
நேற்று புதிதாக 15 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். அதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கின்றனர்.
ஒத்துழைப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பதால் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. நகர் பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், சரிவர முககவசம் அணிய வேண்டும்.
கிராமப்புறங்களில் தற்போதும் ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தாத மக்கள் இருக்கின்றனர். அதாவது 87 சதவீதம் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால், கொரோனா பரவல் வேகம் குறையும்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.