பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்போருக்கு 50 சதவீதம் மானியம்
வேலூர் மாவட்டத்தில் பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்போருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்போருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பண்ணை குட்டையில் மீன்வளர்ப்பு
தமிழக சட்டமன்றத்தில் 2022-23-ம் ஆண்டு கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் பல்நோக்கு பண்ணை குட்டையில் மீன்வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
250 முதல் 1,000 சதுரமீட்டர் அளவிலுள்ள பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய உள்ளீட்டு பொருட்கள் அமைத்திட செலவாகும் மொத்த மதிப்பு ரூ.36 ஆயிரமாகும்.
இதில், 50 சதவீத மானியம் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் மானியமாக மீன் வளர்ப்போருக்கு வழங்கப்படும். இந்த மானியம் பின்னேற்பு மானியமாக அளிக்கப்படும்.
பதிவு செய்ய வேண்டும்...
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பண்ணைக்குட்டை அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தற்போது உறுப்பினராக இல்லையென்றால் பயனாளி உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தில் அதிகம் பேர் விண்ணப்பித்தால் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், பயன்பெற விரும்பும் நபர்கள் காட்பாடி காந்திநகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களையும் அங்கு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.