மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்; தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்


மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம்; தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 July 2023 2:30 AM IST (Updated: 15 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்தார்.

திண்டுக்கல்

பழனி தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தோட்டப்பயிர் சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்கவும் ஊக்குவித்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மாடித்தோட்டம் அமைக்க 'கிட்' வழங்கப்படுவதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பழனி தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலக்குமார் கூறுகையில், "நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்தி செய்யும் நோக்கில் தோட்டக்கலைத்துறை மூலம் மாடித்தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் உள்பட 6 வகையான விதைகள் கொண்ட விதைத்தொகுப்பு, சாகுபடி குறித்த கையேடு, செடி வளர்ப்பு பைகள், தென்னைநார் கழிவு, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர்உரம், வேப்பெண்ணெய் ஆகியவை வழங்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

இதன்மூலம் பொருளாதாரம் சேமிக்கப்படுவதோடு ஆரோக்கியமும் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விதைதொகுப்பு தேவைப்படுவோர் தங்களின் புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் பழனி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.


Next Story