கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக கேரளாவைச் சேர்ந்த அசோகன் (வயது 55) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 1-ம் தேதி பணியிடம் மாறுதல் காரணமாக கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்திற்கு சென்று விட்டார்.
இதனால் செட்டிகுளம் அணு விஜய் நகரத்தில் இருந்த இவரது வீடு பல நாட்களாக பூட்டி இருந்தது. இந்நிலையில் அசோகன் வீட்டு சதவு திறந்து கிடப்பதை கண்டு அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பார்த்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கூடங்குளம் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கைகாவில் உள்ள அசோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பீரோவில் 50 பவுனுக்கும் மேல் தங்க நகைகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று அருகில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி ராமன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் அங்கு பொருட்கள் ஏதும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர். மிகவும் பாதுகாப்பான பகுதியாக உள்ள அணுமின் நிலை ஊழியர்கள் வசிக்கும் அணுவிஜய் நகரத்தில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.