50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்


50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
x

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மின்வாரிய பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மின்வாரிய பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 55-வது மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் 2 நாட்கள் நடந்தது. மாநில தலைவர் ஏ.அந்தோணிபடோவராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிளை தலைவர் சண்முகம், கிளை செயலாளர் சந்திரசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும் வகையிலும், விவசாயிகள் பலன் பெறும் வகையிலும் சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புக்கு பின் தற்போது கூடுதலாக 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மின்துறை அமைச்சருக்கும் பாராட்டுகள் தெரிவித்து கொள்வது.

அதேவேளையில் இந்த இலக்கினை குறித்த காலக்கெடுவுக்குள் துரிதமாக செயல்பட்டு பணிகளை செய்து முடித்த மின்சார வாரிய பணியாளர்களையும் பாராட்டுகிறது. இந்த சாதனை மின்வாரியம் பொது துறையாகவே இருந்ததினால் தான் சாத்தியமாயிற்று.

காலிப்பணியிடங்கள்

மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் பொது துறையாகவே தொடர்ந்திட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

வாரியத்தில் மிகவும் நுட்பமான வேலைகளை கையாளும் பதவியான தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பொதுமக்களுக்கு தரமான தடையற்ற மின்சாரம் வழங்க மிகவும் அவசியமான தளவாட பொருட்களை தொடர்ந்து போதுமான அளவில் வழங்கிட வாரியத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அயல்பணி ஒப்படைப்பு முறையினை கைவிட வேண்டும். தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார், நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story