பாரம்பரிய விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பாரம்பரிய விவசாயம்
நிலையான உற்பத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கைவள பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசும், தமிழக அரசும் பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக 300 எக்டேர் மற்றும் தனி விவசாயிகளுக்கு என 140 எக்டேர் ஆக மொத்தம் 440 எக்டேரில் ரூ.52.30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள 2- 3 கிராமத்தில் உள்ள, குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 எக்டர் கொண்ட தொகுப்பை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். இந்த திட்டத்தில் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ 16 ஆயிரத்து 500, 2-ம் ஆண்டு ரூ 17 ஆயிரம்0 மற்றும் 3-ம் ஆண்டு ரூ 16 ஆயிரத்து 500 ஆக மொத்தம் ஒரு எக்டேருக்கு ரூ 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
மானியம்
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் மற்றொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத விவசாயிகள், வேறு எந்த திட்டத்திலும் பயன்பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக இந்த திட்டத்தில் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ 2000, இரண்டாம் ஆண்டு ரூ 2000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ 2000 என மொத்தம் ஒரு எக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ 1000, குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ 1500, மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ 700, பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ.12 ஆயிரம் மற்றும் விளம்பர செலவினங்கள் ரூ.1300 என மொத்தம் ஒரு எக்டருக்கு முதலாம் ஆண்டு ரூ.16 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.