உப்பனாற்றின் கரை உடைந்து கடல் நீர் புகுந்ததால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உப்பனாற்றின் கரை உடைந்து கடல் நீர் புகுந்ததால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உப்பனாற்றின் கரை உடைந்து கடல் நீர் புகுந்ததால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உப்பனாறு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமம் உள்ளது. கடற்கரை கிராமமான இந்த பகுதியில் உப்பனாறு ஓடுகிறது..
இந்த உப்பனாறு தேனூர், கொண்டல், ஆதமங்கலம், புங்கனூர், நிம்மேலி, மருதங்குடி, சீர்காழி, பனமங்கலம், தென்பாதி, சட்டநாதபுரம் திட்டை, தில்லைவிடங்கன், திருநகரி, புதுத்துறை, வெள்ளப்பள்ளம், திருமுல்லைவாசல், வழுதலைக்குடி உள்ளிட்ட கிராமங்களின் வடிகாலாகவும் உள்ளது.
இந்த வடிக்கால் வாய்க்கால் மூலம் ஆண்டுதோறும் திருமுல்லைவாசல் கடலில் இருந்து உட்புகும் உப்பு நீர் சீர்காழி அருகே பனமங்கலம் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உப்பு நீராக மாறி வருகிறது.
கரை உடைந்தது
இதனைத் தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருமுல்லைவாசல் உப்பனாற்றில் கடல் நீர் உட்புகாத வகையில் வெள்ளப்பள்ளம் என்ற இடத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தடுப்பணை அமைப்பதற்காக மண் மேடுகளான தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருமுல்லைவாசல் அருகே பழுவஞ்சி என்ற இடத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உப்பனாற்றின் கரையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு வழுதலைக்குடி, ராதாநல்லூர், கே.பி.எஸ். மணி நகர், பெரியார் நகர், தாழதொண்டி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களில் கடல் நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலங்களில், நேரடி நெல் விதைப்பு செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விளைநிலங்கள் பாதிப்பு
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்டீபன் ராஜ் என்பவர் கூறுகையில், திருமுல்லைவாசல் ஊராட்சியில் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறிவருகிறது. உப்பனாற்றில் வெள்ளப்பள்ளம் என்ற இடத்தில் தடுப்பணை கட்ட மண் மேடுகள் அமைக்கப்பட்டதால் உப்பு நீர் மேலே செல்ல வழி இல்லாமல் பழுவஞ்சி என்ற இடத்தில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு உப்பு நீர் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்தது. விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உப்பு நீர் புகுந்ததால் மீண்டும் அந்த நிலத்தை விவசாயம் செய்ய தயார்படுத்த 2 ஆண்டுகள் ஆகும்.
கே.பி.எஸ்.மணி நகர், பெரியார் நகர், ராதா நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கடல் சூழ்ந்ததால் அந்த பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்
இதுகுறித்து சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும், இதுவரை எடுக்கவில்லை. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுப்பணி துறையினர் உடனடியாக திருமுல்லைவாசல் உப்பனாற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து கரையை பலப்படுத்தி கடல் நீர் உட்புகாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும் இல்லையென்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மக்களை ஒன்று திரட்டி திருமுல்லைவாசலில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.