மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்உற்பத்தி; மத்திய மந்திரி பேட்டி


மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்உற்பத்தி; மத்திய மந்திரி பேட்டி
x

2030-ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி பகவந்த் குபா கூறினார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

2030-ம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி பகவந்த் குபா கூறினார்.

காற்றாலை டர்பைன்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பிரேசில் நாட்டை சேர்ந்த டபிள்யூ.இ.ஜி. நிறுவனம் மற்றும் பாலாஜி அன்கோ நிறுவனம் இணைந்து ரூ.88 கோடி மதிப்பில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது.

இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த காற்றாலை டர்பைனை, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரங்கள் இணை மந்திரி பகவந்த் குபா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த நிறுவன அதிகாரிகளிடம் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.

பேட்டி

பின்னர் மத்திய மந்திரி பகவந்த் குபா நிருபர்களிடம் கூறியதாவது:-

வள்ளியூர் வடலிவிளையில் பிரேசில் நாட்டை சேர்ந்த டபிள்யூ.இ.ஜி. நிறுவனம் இந்தியாவில் அதிக உற்பத்தி திறனான 4.2 மெகாவாட் காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது. எதிர்காலத்தில் 7 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட டர்பைன் தயாரிக்க உள்ளோம். இந்திய கடலோர பகுதியில் 70 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது.

அதாவது குஜராத்தில் 35 ஜிகாவாட், தமிழ்நாட்டில் 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. இதில் குறிப்பாக ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் இருக்கிறது. இங்கு 2 காற்றாலை டர்பைன் நிறுவ உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரத்தை வினியோகிக்க முடியும்.

500 ஜிகாவாட் மின்சாரம்

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். இதற்கு போதுமான அளவு வாய்ப்பும், வளமும் இந்தியாவில் உள்ளது.

சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக பாலாஜி அன்கோ உரிமையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 'இதுபயன்பாட்டிற்கு வந்ததும் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஏழை- எளியவர்கள் வசிக்கும் 800 வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முடியும். இந்த காற்றாலை அமைப்பதன் மூலம் விவசாய நிலத்திற்கோ அல்லது இயற்கை வளத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜீன்கார்நோபஸ்கீ, ஆவரைகுளம் வக்கீல் சுரேஷ் மார்த்தாண்டம், வள்ளியூர் நகர பா.ஜ.க. தலைவர் ராஜேஷ், வள்ளியூர் நகர பொதுச்செயலாளர் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story