வேலூரில் இருந்து 500 போலீசார் பயணம்
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு வேலூரில் இருந்து 500 போலீசார் சென்றனர்.
திருவண்ணாமலை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு விழாவுக்கு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து போலீசார் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீசார் சென்றனர். அவர்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.
வேலூரில் இருந்து புறப்பட்டு செல்லும் முன்பு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து அறிவுரை வழங்கினார்.