500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
தமிழகத்தில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டபடி இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டபடி இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதை வரவேற்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காலாண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால், அடுத்த 2½ ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதே போன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடலுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.