5 ஆயிரம் ஏக்கர் பருத்தி செடிகள் சாய்ந்தன
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சூறாவளி காற்று
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்தன. மேலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகளாக உள்ளது. முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் பத்து நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு செடிகள் வந்தது. ஆனால் இந்த சூறாவளி காற்றால் பருத்தி காய்கள் கொட்டி விட்டன.
5 ஆயிரம் ஏக்கரில்...
குறிப்பாக பருத்திச் செடிகள் பல இடங்களில் கிளை ஒடிந்து சாய்ந்துள்ளது. திருவாரூர் அருகே கானூர், கள்ளிக்குடி, தென்ஓடாச்சேரி, அக்கரை ஓடாச்சேரி, வடபாதிமங்கலம், செருவாமணி, விக்கிரபாண்டியம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 80 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகள் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் பருத்தி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து பருத்திச் செடிகள் அழுகி இருந்தன. பின்னர் தண்ணீரை வடிய வைத்து உரம் வைத்து பாதுகாத்தோம்.
இழப்பீடு வழங்க வேண்டும்
அதில் இருந்து தப்பி பிழைத்த பருத்தி செடிகளில் இருந்து முதல் சுற்று பஞ்சு எடுக்க வேண்டிய நிலையில், சூறாவளி காற்று அடித்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஏற்கனவே மழைநீர் சூழ்ந்து அழுகிய போதும் மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி செடி குறித்த கணக்கெடுப்பு நடத்தவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக சூறாவளி காற்று அடித்து பருத்திச் செடிகள் சேதமடைந்துள்ளன. எனவே இது குறித்து தமிழக அரசு கணக்கெடுப்பை நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்
நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். தற்போது பருத்தி பயிர்கள் பூ வைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் பருத்தி பயிரில் பூத்திருந்த பூக்கள் உதிர்ந்து, பருத்தி செடிகள் சாய்ந்தன.