குரூப்-1 தேர்வினை 5,075 பேர் எழுதினர்
குரூப்-1 தேர்வினை 5,075 பேர் எழுதினர்
தஞ்சை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு 27 மையங்களில் நேற்று நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 75 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 39 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-1 தேர்வு
தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் குரூப்-1 தேர்வு நேற்று நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 27 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 8 ஆயிரத்து 312 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
61 சதவீதம் தேர்வு எழுதினர்
ஆனால் நேற்று இந்த தேர்வினை 5 ஆயிரத்து 75 பேர் மட்டும் எழுதினர். இது 61 சதவீதம் ஆகும். 3 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 39 சதவீதம் ஆகும். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வு மையத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.