அபயாம்பிகை யானை வந்த 50-வது ஆண்டு விழா
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு அபயாம்பிகை யானை வந்த 50-வது விழா கொண்டாடப்பட்டது. விழாவில் யானைக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு அபயாம்பிகை யானை வந்த 50-வது விழா கொண்டாடப்பட்டது. விழாவில் யானைக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
மாயூரநாதர் கோவில்
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 1972-ம் ஆண்டு 3 வயதில் வந்த யானைக்கு அபயாம்பிகை என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை அபயாம்பிகை யானையை முறையாக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மூன்றாம் தலைமுறை யானைப்பாகன் செந்தில் வரை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இக்கோவலில் விழா காலங்களில் உற்சவமூர்த்திகள் வீதி உலா செல்லும்போது அலங்காரத்துடன் அபயாம்பிகை யானை முன்னே சென்று சிறப்பாக இறைபணி செய்தும், பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறது.
யானைக்கு சீர்வரிசை
இந்த அபயாம்பிகை யானை கோவிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறையில் அபயாம்பிகை யானையின் 50-வது பொன்விழா ஆண்டு கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக யானைக்கு சீர்வரிசை எடுத்து வரும் வைபவம் நடந்தது. வல்லப கணபதி கோவிலில் இருந்து பக்தர்கள் கைலாயம் மற்றும் மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். யானை அபயாம்பிகை கழுத்தில் அலங்காரம் மணி, காலில் வெள்ளி கொலுசு மற்றும் புத்தாடை அணிந்து கம்பீரத்துடன் வலம் வந்த யானையுடன் பக்தர்கள் ஊர்வலமாக சீர்வரிசையுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது. யானை அபயாம்பிகைக்கு திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.